சிவகங்கையில் பிசிஆர் பரிசோதனை மையம் திறப்பு: கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சிறுமி வீட்டுக்கு அனுப்பிவைப்பு

377 0

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை மையம் திறக்கப்பட்டது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி குணமடைந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. அதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதில் ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 7 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருப்பத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி குணமடைந்தார். அவருக்கு கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் பொன்னாடை கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பரிசோதனை மையம் திறப்பு:

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் எடுக்கப்படும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை மையம் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

இம்மையத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். இதனால் பரிசோதனை முடிவு தாமதம் தவிர்க்கப்படும். 8 மணி நேரம் கொண்ட ஒரு ஷிப்டுக்கு 45 பரிசோதனைகள் செய்யப்படும்.

முதற்கட்டமாக 2 ஷிப்டுகளாக இயங்கும். எண்ணிக்கை அதிகரிக்கும்போது மூன்றாவது ஷிப்டு தொடங்கப்படும் என மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் தெரிவித்தார்.