சிறிலங்கா அரசாங்கம் மக்களை ஆபத்திற்குள் தள்ளியிருக்கிறது! -உமா

589 0

கொரோனோ பாதிப்பு முற்றாக நீங்காத நிலைமையில் தேர்தலை நடாத்துவதற்காக ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஆபத்திற்குள் அரசாங்கம் தள்ளியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் தேர்தலை இலக்கு வைத்து சுயலாப தீர்மானங்களையே இந்த அரசாங்கம் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது.

நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வைத்தியத் துறையினர் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினர் என பலரும் தமது உயிரைப் பணயம் வைத்து தான் மக்களின் உயிர்களைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் கொரோனோ தொற்று பாதிப்பு நாட்டில் முற்றாக ஒழியாத நிலையில் தேர்தலை நடாத்துவதனை நோக்காகக் கொண்டு ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தியிருக்கின்றது. கொரோனோ அபாயம் நீங்காத நிலைமையில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானம் என்பது மிகவும் ஆபத்தானது.

இவர் தான் கொரோனோ கடைசி நோயாளி என்று அடையாளம் காணப்படாமல் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலை இலக்கு வைத்து எமது மக்களின் உயிர்களோடு விளையாடுகின்ற செயற்பாடாகத்தான் அரசின் நடவடிக்கைகள் பார்க்கப்பட வேண்டும்.

ஏனென்றால் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களைப் பார்க்கின்ற போது இதன் பாதிப்புக்கள் என்ன என்பது பலருக்கும் தெளிவாக விளங்கியிருக்கும். குறிப்பாக இராணுவமோ பொலிசோ சுகாதார பிரிவோ எந்தத் தரப்பினராலும் என்ன தான் கட்டப்பாடு விதித்தாலும் மக்கள் தங்களுடைய பாணியில் தான் அவர்களது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள்.

எனவே இதன் அபாயத்தை அரசாங்கம் உணரவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் அரசைப் பொறுத்தவரையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதால் மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அதாவது எங்கள் ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற அனர்த்தத்தில் பாராளுமன்றத்தைக் மீளக் கூட்டி இந்த அனர்த்த நெருக்கடிகளைக் குறைத்துக் கொண்ட அதனைத் தீர்த்த பின்னர் பொறுமையாக தேர்தலை எதிர்கொள்வது தான் மிகச் சாலப் பொருத்தமாக இருக்குமென்று கருதுகின்றோம்

ஏனெனில் இந்த கொரோனோ தொற்றின் ஆபத்தின் எல்லை தெரியாது. ஆகையினால் இதன் ஆபத்தை உணர்ந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதனூடாகவே மக்களும் ஆபத்துக்களிலில் இருந்த பாதுகாக்கப்படுவார்கள்.

குறிப்பாக கொரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தாலும் நோயில் இருந்த பாதுகாக்கின்ற நிலைமை இருந்தது. ஆனால் திடீரென்று கட்டுப்பாட்டை தளர்த்தப்படும் போது ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது

ஆகையினால் ஆபத்தின் நிலையை கருத்தில் கொண்டுதான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆபத்தின் நிலையை உணர்ந்தும் தேர்தலை நோக்காக் கொண்டு தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே தேர்தலை நோக்காகக் கொண்டு மக்களிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை அல்லது செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.