தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் – வாசுதேவ

305 0

தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே, எதிர்கட்சியினர் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் என சிறிலங்காவின் முன்னாள் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த கலந்துரையாடலின்போது, சில தரப்பினர் தேவையில்லாத கருத்துக்கள் மற்றும் சட்டச்சிக்கல்களைக் கூறி, பொதுத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டமையைத் தான் அவதானிக்க முடியுமாக இருந்தது.

கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமானால் ஜுன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பினை வெளியிட, எந்தவொருக் காரணமும் கிடையாது.

எம்மைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே, இவர்கள் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.