இம்ரான்கான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்: உதவியாளர் தகவல்

312 0

பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளளார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 200-ஐ நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டில் இயங்கிவரும் பிரபலமான அறக்கட்டளையின் தலைவர் பைசல் எடி என்பவர் பிரதமர் இம்ரான்கானை கடந்த வாரம் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்த சில தினங்களுக்கு பிறகு பைசல் எடிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்ரான்கானுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, இம்ரான்கானுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வலுத்தன.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இம்ரான்கான் ஒப்புக்கொண்டதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளளார். இதுபற்றி அவர் கூறுகையில், “பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்வார்” என கூறினார்.