கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கோரி ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்த நோய்கிருமியை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், பெருந்தொற்று நோயான கொரோனாவால் இதற்கு முன் எப்போதும் இல்லாத பாதிப்பு உலக நாடுகளுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
பின்னர், கொரோனா பாதிப்பு நிலவும் இந்த சூழ்நிலையில் வர்த்தக போரை கைவிட கோரியும், தன்னிச்சையான பொருளாதார தடைக்கு எதிராகவும் ரஷியா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பது, புதிய மருத்துவ உபகரணங்களை தயாரிப்பது, மருத்துவ பரிசோதனை, மருந்து பொருட்கள் சப்ளையில் பரஸ்பரம் உதவுவது மற்றும் சர்வதேச அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மெக்சிகோவின் சார்பில் வரைவு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
இந்த விஷயத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மசோதாவை ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் திஜானி முகமது பாண்டே 193 உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். ஐ.நா. சபையின் புதிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த தீர்மானம் நிறைவேறாது. ஆனால் எந்த நாடும் எதிர்க்கவில்லை என்றும், இதனால் தீர்மானம் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேறி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் உருவான கொரோனா நோய்க்கிருமி மற்ற நாடுகளுக்கு பரவுவதை, ஐ.நா. சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பு தடுக்க தவறிவிட்டதாக சமீபத்தில் குற்றம்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த அமைப்புக்கு தங்கள் நாடு வழங்கும் நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்தார்.
என்றாலும் ஐ.நா. சபையில் இந்த தீர்மானம் நிறைவேறுவதை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடவில்லை.