மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்பட 1,800 பேரின் பெயர்களை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு ரகசியமாக நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனக்கு பக்கபலமாக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ நிதி உதவியும் அளித்து வருகிறது. அமெரிக்காவின் ராணுவ நிதி உதவி பெற்று வருகிற நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் திகழ்கிறது.
ஆனால் பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது.
இது அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல முறை பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்.
மேலும் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. எனினும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை.
இந்த நிலையில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதியுமான சாகி உர் ரெஹ்மான் லக்வி உள்பட 1,800 பேரின் பெயர்களை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு சத்தமே இல்லாமல் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒழுங்கு முறை தொழில்நுட்ப நிறுவனமான காஸ்டெல்லம் ஏ.ஐ. என்ற நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் சுமார் 7,600 பெயர்கள் இருந்தாகவும், ஆனால் அது கடந்த 18 மாதங்களில் 3,800-க்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளதாகவும் காஸ்டெல்லம் ஏ.ஐ. தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி சாகி உர் ரெஹ்மான் லக்வி உள்பட 1,800 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பல பெயர்கள் அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையின் பொருளாதார தடை பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக்கூறி சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்) அந்த நாட்டை சாம்பல் பட்டியலில் வைத்துள்ளது.
பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்பது குறித்து எப்.ஏ.டி.எப். வருகிற ஜூன் மாதம் முடிவு செய்ய உள்ள நிலையில், அந்த நாடு சுமார் 4 ஆயிரம் பயங்கரவாதிகளின் பெயரை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.