ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பழைய பாராளுமன்றம் கூடும்! -அகிலவிராஜ் காரியவசம்

298 0

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவித்துள்ள நிலையில் அதனை கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா இல்லையா என்பது இரண்டாம் பட்சமாகும். தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பொறுத்தமானதா என்று சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் , ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பழைய பாராளுமன்றம் கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்கான தினம் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

இன்று ;தேர்தல்கள் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினம் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு நாம் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினோம்.

காரணம் தற்போது இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கூட்டங்கள் , மத உற்சவங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர்கள் அதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மக்கள் சந்திப்புக்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்தவாறுள்ளது. எனவே தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான சூழல் நாட்டில் உள்ளதா என்று ஆராய வேண்டும். இது தொடர்பில் ஆணைக்குழு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆனால் மக்களின் உயிரை கேள்விக்குட்படுத்தி தேர்தலுக்குச் செல்ல தேவையில்லை. அரசியலமைப்பின்படி ஜூன் மாதம் 2 ஆம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும்.

ஆனால் ஜூன் 20 ஆம் திகதியே தேர்தலுக்கான தினம் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியலமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கலை அவதானிக்கும் போது ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பழைய பாராளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.