தற்போதைய சுகாதார நெருக்கடியில் அறிவியல் ஆதார பூர்வ தகவல்களுக்கும் புனைகதைகளுக்கும் வேறுபாடு தெரியாத குழப்பகரமான நிலைமைக்குள் உலகம் விடப்பட்டிருக்கிறது.
இதனை அடிப்படையாக கொண்டு ஜேர்மனியின் வரலாற்றாய்வாளர் ஒருவர் வைரஸ் தொற்று நோயை ஒரு ‘மனநோய்’ அல்லது ‘மனதால் பரப்பப்படும்’ நோய் என்ற அர்த்தத்தில் பதிவு செய்கிறார்.
மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தீர்மானங்கள் அதுசார்ந்த அறிவியலின் தளத்தில் முடிவுசெய்யப்படவேண்டுமே தவிர அரசியல் தளத்தில் நின்று அல்ல.
சிறிலங்கா போன்ற நாடுகளில் ஊரடங்கை நீக்கும் முடிவுகள் அரசியல் நோக்குடைய தளங்களில் தீர்மானிக்கப்படுவதை பார்க்கின்றோம். சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் அங்கு புறக்கணிக்கப் படுகின்றன எனத் தகவல்.
இந்த சமயத்தில் ஜேர்மனிய சான்சிலர் அஞ்சேலா மெர்கல் அம்மையார் எப்படி ஒரேசமயத்தில் நாட்டின் தளபதியாகவும் ஒரு விஞ்ஞானியாகவும் இருந்து கொண்டு சிறந்த முடிவுகளை எடுக்கிறார் என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை The Atlantic வெளியிட்டுள்ளது.
ஏனைய வல்லரசுகளுடன் ஒப்பிடும்போது ஜெர்மனியை கொரோனா வைரஸின் தீவிர தாக்கத்தில் இருந்து தடுத்து கட்டுக்குள் வைத்து குறைந்தளவு சேதங்களுடன் நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கிறார் அஞ்சேலா மெர்கல்.
அதற்கு அவரது விஞ்ஞான அறிவியல் பின்புலமே காரணம் என்கிறது இக் கட்டுரை.
உள்நாட்டில் பெருகும் தேசியவாத அலையினால் மங்கிப்போயிருந்த அவரது முக்கியத்துவத்தை கொரோனா நெருக்கடியை கையாளும் அவரது திறமை எப்படி மீண்டும் பிரகாசிக்க வைக்கிறது என்பதை இக் கட்டுரை சொல்ல முனைகின்றது.