“மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில், தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சர்வதேசமே தனது நிகழ்ச்சி நிரலில் இயங்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கையில் தேர்தலை நடத்துவது மனிதாபிமானமுள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
‘கொரோனா’ நோயின் தாக்கத்தினால் மக்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களுக்கான தேவைகளும் அதிகமாக உள்ளன. அவற்றைத் தீர்த்துவைக்காமல் தேர்தலுக்கு செல்வதென்பது அவர்கள் மீது தேர்தலை திணிப்பதற்கு ஒப்பானதாகும்.
இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் நாட் கூலி வேலைக்கு சென்று தங்களது குடும்பங்களை பாதுகாத்து வந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகள் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்கு செல்வதென்பது மனிதாபிமானமற்ற ஜனநாயகத்தை மீறுகின்ற செயலாகும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் நிவாரணங்கள் சரியான முறையில் செயற்படத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல ‘கொரோனா’ நோயின் அச்சத்தில் இருந்து மக்கள் முழுமையாக இன்னும் விடுபடவில்லை. ‘கொரோனா’ நோயின் தாக்கம் முற்று முழுதாக நீங்கிவிடும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை.
இவைகளைப்பற்றி சிந்தித்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்னர் தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை செய்யுமாறு ஜனாதிபதி அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.