யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும் அதனை ரத்து செய்யுமாறும் ;கோரியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை இலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக இன்று தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கவுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 19 ஆம் திகதி மிருசுவில் பகுதியில் தனது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 5 வயதுக்கும், 41 வயதுக்கும் இடைப்பட்ட தமிழர்கள் எட்டுப் பேர் காணாமற்போயிருந்தனர்.
மறுநாள் இவர்கள் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன ;இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரின் பிடியில் இருந்து, காயங்களுடன் தப்பிய ஒருவர், இந்த தகவலை வெளிப்படுத்தியதை அடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
அதன்படி, ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் (வயது 7) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தந்தை, ஐந்து மற்றும் 13 வயது இரண்டு பிள்ளைகள், பிறிதொரு தந்தை மற்றும் அவரது 13 வயது மகன், இரண்டு மைத்துனர்கள் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களாவர். இந்த எண்மரும் இராணுவத்தினர் 6 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது.
இந்த எண்மரும் மிருசுவிலுள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் புதைக்கப்பட்டதாக வழக்கு விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டது.
2000 ஆம் ஆண்டில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் குறுகிய கால போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்தது. அப்போது மிருசுவிலுள்ள தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக சிலர் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் வழமையாக தமது காணிகளைப் பார்வையிட்டு விறகுகளை எடுத்து வருவது வழமையான செயலாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி அன்று காலை 10 மணியளவில் இவர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் தமது சொந்த நிலங்களை நோக்கிச் சென்றதாகவும் இதன்போது விறகுகளைச் சேகரிப்பதற்கும் முயன்றதாகவும் இந்த படு கொலை சம்பவத்தின் போது உயிர் தப்பிய பொன்னுத்துரை மகேஸ் எனும் பிரதான சாட்சியாளர் வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த தினம் பி.ப 4 மணி, சிறுவன் ஒருவனுக்கு கொய்யாப்பழம் சாப்பிட ஆசை ஏற்படவே, இவர்கள் அந்த மரத்திற்கு அருகில் சென்றதாகவும் ; அதன் பின்னர் அவர்களை இரண்டு இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு விசாரித்ததாகவும் சாட்சியாளர் வெளிப்படுத்தியிருந்தார்
ஒருவர் ; துப்பாக்கி வைத்திருந்தார். மற்றவரின் கையில் கத்தி இருந்தது. இவ்விருவரும் திரும்பிச் சென்று மேலும் 2 பேருடன் அந்த இடத்திற்கு வந்தனர். தமது நிலங்களில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றவர்களில் ஒருவருக்கு ஒரு கை இல்லை. இதனை மிதிவெடி விபத்தின் போது இழந்திருந்தார்.
மிதிவெடி விபத்தில் கையொன்றை இழந்திருந்த நபரிடம் ஒரு மணித்தியாலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரது கண்களும் கட்டப்பட்டன.
எனது கண்கள் கட்டப்பட்ட போது, நான் ; மயக்கமுற்றுவிட்டேன். இதனால் நான் மீண்டும் எழுந்திருக்கும் வரை என்ன நடந்ததென்பது எனக்குத் ; தெரியாது.
என்னை ; இராணுவத்தினர் மலகுழி நோக்கித் தூக்கிச் செல்வதை நான் ; உணர்ந்தேன் ‘ என படுகொலையில் தப்பிய பிரதான சாட்சியாளர் ; மகேஸ்வரன் மன்றில் சாட்சியமளித்து ; நடந்ததை வெளிப்படுத்தியிருந்தார்
மகேஸ்வரன் தப்பிச் சென்று தக்வல் கொடுத்ததற்கு அமையவே இந்த விவகாரத்தில் இராணுவ, காவல் துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்படி 15 இராணுவத்தினர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சாவகச்சேரி நீதிவானாக அப்போது, தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமையாற்றியிருந்தார்.
15 இராணுவத்தினரையும் விளக்கமறியல் வைத்த நீதிவான் அன்னலிங்கம் பிரேமசங்கர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இராணுவ காவல் துறை மற்றும் காவல் துறை உள்ளிட்டோரின் முன்னிலையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டன.
இந் நிலையில் 15 இராணுவத்தினரில் 10 பேரை விடுவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், 5 இராணுவத்திருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தது. 17 குற்றச்சாட்டுகளை அவ்ரகள் மீது சுமத்தியது.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய, தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரான ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் வழங்கப்பட்டது.
அதன்படி, ஸ்ராப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ வீரரை குற்றவாளியாக காண்ட நீதிபதிகள், அவருக்கு மரண தண்டனை விதித்தார்
எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய நான்கு இராணுவ வீரர்களையும் நீதிபதிகள் விடுவித்தனர். ; லெப்டினன் ஆர்.டப்ளியூ. சேனக முனசிங்க, இராணுவ சிப்பாய்களான ; டி.எம். ஜயரத்ன, எஸ்.ஏ. புஷ்ப சமன் குமார, மற்றும் காமினி முனசிங்க அகையோரே விடுவிக்கப்பட்டவர்களாவர்.
இந் நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக குற்றவளியான சுனில் ரத்னாயக்க உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்தார். அந்த மேன் முறையீட்டு மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் மேன் முறையீட்டு மன்றின் மரண தண்டனை தீர்ப்பை கடந்த 2019 மார்ச் 25 ஆம் திகதி உறுதி செய்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ; புவனகே அலுவிகார, சிசர ஜே டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்த்தன, நளின் பெரேரா மற்றும் முர்து பெர்னான்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந் நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலம் முதல் இந்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கப்படல் வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. இந் நிலையில் புதிதாக ஜனாதிபதியாக ; பதவியேற்ற கோத்தாபய ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க எனும் இந்த குற்றவாளிக்கு மன்னிப்பளித்திருந்தார்.