மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

347 0

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30 க்கு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறிலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது தொடர்பாக ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விசேட சந்திப்பில் ஈடுபட்டவுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளும், தேர்தல்கள் செயலக அதிகாரிகளும், பொதுநிர்வாக சேவை உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலையைக் கவனத்தில்கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

சிறிலங்கா ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிறிதொரு திகதியை அறிவிக்கும் என சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர்தெரிவித்திருந்தார்.

அத்துடன் திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.