கொரோனா நேரத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம் என நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அவற்றை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான புரட்சி நடைபெற்று வருகிறது. இந்த புரட்சியில் மக்கள் அரசோடு கைகோர்க்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தவறான கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். நாட்டு படகு வைத்திருப்பவர்கள் 8 நாட்டிக்கல் மைல்தான் கடலில் செல்ல முடியும். நம்முடைய எல்லையில் வெளிநாட்டு கப்பல் எப்படி மீன் பிடிக்க முடியும்.? இது ஒரு மட்டமான, மலிவான அரசியல். இந்த நேரத்தில் கமல்ஹாசன் அரசியல் செய்வதை விட்டு விட்டு உரிய ஆலோசனைகளை சொன்னால் நன்றாக இருக்கும்.
இந்த கொரோனா நேரத்தில் மு.க.ஸ்டாலினும், நடிகர் கமல்ஹாசனும் அரசியல் விளையாட்டு விளையாட வேண்டாம். மீனவர் நலனுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.4.5 லட்சம் மீனவர்களுக்கு நிதி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பி.சி.ஆர். கருவி போதிய அளவில் உள்ளதால் பயப்பட தேவை இல்லை. நோய் எதிர்ப்பு திறனை கண்டுபிடிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட் கருவி. இதுவரை 24,000 கருவிகள் வந்துள்ளது. வல்லுனர் குழு முதல்-அமைச்சருக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து அவர் முடிவு செய்வார். சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு அரசின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
ஏதாவது நிறுவனங்கள் சம்பளம் கொடுக்காமல் தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபடும்போது அரசு நடவடிக்கை எடுக்கும். ஊரடங்கை காரணம் காட்டி காய்கறிகள், இறைச்சிகளை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.