பஞ்சாபில் இருந்து உ.பி.க்கு நண்பர்களுடன் சைக்கிளில் 850 கி.மீ. பயணித்து வந்த மணமகன்

299 0

பஞ்சாபில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு தனது திருமணத்துக்காக சைக்கிளில் 850 கி.மீ. தொலைவுக்கு நண்பர்களுடன் பயணித்து வந்த மணமகன் போலீசில் சிக்கினார். அவர்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24).

இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள தள செங்கல்கள் (டைல்ஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஏப்ரல் 15-ந்தேதி, சொந்த ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் நிச்சயம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லா போக்குவரத்து சாதனங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் திருமணத்துக்காக உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு எப்படி செல்வது என்பது பற்றி சோனுகுமார் சவுகான் நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார். அவர்கள், சைக்கிளிலேயே சென்று விடலாம் என யோசனை கூறினர்.

அந்த யோசனையை ஏற்ற அவர், லூதியானாவில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு தனது 3 நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டார்.

எல்லோரும் இரவு, பகலாக சைக்கிள் மிதித்து 850 கி.மீ. தொலைவுக்கு வந்து விட்டனர்.

12-ந் தேதி, உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்ட எல்லைக்கு வந்தபோது அவர்களுக்கு சோதனை, போலீஸ் வடிவில் வந்தது.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணைக்கு பின்னர் அங்குள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பினர்.

இதையடுத்து மணமகன் சோனு குமார் சவுகானும், அவரது 3 நண்பர்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி சோனுகுமார் சவுகான் கூறும்போது, “லூதியானாவில் இருந்து நாங்கள் சைக்கிளில் புறப்பட்டு 850 கி.மீ. தொலைவுக்கு வந்து விட்டோம். இங்கிருந்து எங்கள் ஊர் 150 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. ஆனால் இங்கு போலீசாரிடம் சிக்கிக்கொண்டோம். அதனால் எங்களை தனிமைப்படுத்தும் முகாமில் வைத்து விட்டனர். இரு வாரங்கள் இங்கு கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். எங்களை அனுமதித்திருந்தால் நிச்சயிக்கப்பட்டபடி எனது திருமணம் நடந்திருக்கும். எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாகக்கூட நடத்தி இருப்போம். ஆனால் எவ்வளவோ வேண்டிக் கொண்டும் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுவும் முக்கியம்தான். திருமணத்தை பின்னர் நடத்திக் கொள்ளலாம்” என்றும் தெரிவித்தார்.

பல்ராம்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவரஞ்சன் வர்மா இதுபற்றி கூறுகையில், “எங்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைகிறபோது சவுகானையும், அவரது நண்பர்களையும் தடுத்து நிறுத்தி விட்டோம். விதிப்படி அவர்களை தனிமைப்படுத்தி முகாமில் தங்க வைத்துள்ளோம். இருவார காலத்தில் அவர்களது பரிசோதனை அறிக்கை வந்து விடும். அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தால், ஊருக்கு செல்ல அனுமதி அளித்து விடுவோம்” என குறிப்பிட்டார்.