கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மாநகர பகுதிகளில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதுடன், குப்பைகள் சேருவதும் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் அலுவலக சந்திப்புகளை வீட்டில் இருந்தபடியே காணொலிக் காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், மாநகர பகுதிகளில் திடக்கழிவு சேர்வதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினசரி 5 ஆயிரத்து 500 டன் குப்பைகள் அகற்றப்படுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு குப்பைகளின் அளவு 3 ஆயிரத்து 800 டன்னாக குறைந்துள்ளது.
இதனால் சென்னையில் பெருங்குடி, கொடுங்கையூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அத்திப்பட்டு, சேக்காடு, மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், சிட்லபாக்கம் உள்பட ஏக்கர் கணக்கிலுள்ள குப்பை மேடுகளுக்கு குப்பைகள் வருகையும் குறைந்து உள்ளது.
சென்னையில் காற்று மாசுபாடும் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக காற்றில் நுண்துகள்களின் அளவு 50-க்கும் குறைவாக இருந்தால் தூய காற்று, 50 முதல் 100 வரை இருந்தால் சுவாசிக்கத்தக்கது, 100-200 ஓரளவு மாசு, 200-300 மாசடைந்த காற்று, 300-400 மோசமான காற்று, 400-500 வரை அபாயகட்டம் என்று மத்திய அரசால் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சராசரியாக நுண்துகள்களின் அளவு 150 என்ற அளவில் இருப்பது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 100 என்ற அளவுக்கும் கீழே வந்து விட்டது. குறிப்பாக மணலியில் கடந்த மாதம் 96 என்ற அளவில் இருந்து தற்போது 48 என்ற அளவில் உள்ளது. இதேபோன்று மாநகர் முழுவதும் காற்று மாசு வெகுவாக குறைந்து உள்ளது.
கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர் ஆகிய தொழிற்சாலை பகுதிகளிலும், கீழ்ப்பாக்கம், தியாகராயநகர், நுங்கம்பாக்கம் ஆகிய வியாபாரம் மற்றும் வாகன புழக்கம் நிறைந்த பகுதிகளிலும், அண்ணாநகர், அடையாறு ஆகிய குடியிருப்பு பகுதிகளிலும் தேசிய காற்று மண்டலக் கண்காணிப்புத் திட்டத்தின் படி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றில் தரமான காற்று பயன்படுத்தப்படுகிறதா? என்பதை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாரம் இருமுறை 24 மணி நேரமும் அளவீடு செய்து வருகிறது.
இந்த தகவலை சென்னை மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மாநகரங்களில், இதேபோன்று நோய் தாக்கம் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் சீரான முறையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படுவதுடன், நீர் ஆதாரங்கள், காற்று, ஒலி மாசு கட்டாயம் குறையும்’’ என்றனர்.