உகான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா வைரஸ் என நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் விஞ்ஞானி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகர கடல்வாழ் உணவுப்பொருட்கள் சந்தையில் உருவானது என ஆரம்ப கட்ட தகவல்கள் கூறின.
ஆனால் இப்போது உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில்தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு, அது கசிந்து வெளியே வந்து பரவியுள்ளதாக அமெரிக்க டெலிவிஷன் ஒன்று பிரத்யேக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்துகிறது.
இந்தநிலையில் உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, லூக் மாண்டாக்னியர் உறுதிபடுத்தி உள்ளார்.
இதையொட்டி அவர் பிரான்ஸ் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “உலகமெங்கும் பேரழிவை ஏற்படுத்தும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்), உகான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான்” என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் எச்.ஐ.வி. வைரஸ் கண்டுபிடிப்புக்காக 2008-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.