தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சிறிலங்கா அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது – எஸ்.சிவமோகன்

378 0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சிறிலங்கா அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ‘வெளிவரும் ஊடக செய்திகளின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதை மக்களால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

வரப்போகும் அனர்த்தங்களை புரிந்து கொண்டு அரசியல் யாப்புக் குழப்பங்கள் ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் விடுத்திருந்தார்.

அதற்கு சிறிலங்கா ஜனாதிபதியின் சார்பாக பதிலளித்த செயலாளர், அரசியல் யாப்பு வியாக்கியானங்களை தெரிவித்து தேர்தலை நடத்துவதற்கு உரிய வகையில் எழுத்து மூலமான பதிலை வழங்கியிருந்தார்.

தற்போதைய அபாய சூழலை புரிந்து கொள்ளாத சிறிலங்கா அரசின் அமைச்சர் உட்பட பலர் தேர்தலை நடத்த முடியும் அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடமே உள்ளது என அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர்.

சிறிலங்காவில் கொரோனா நீங்கி விட்டதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஜனாதிபதி செயலணி நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அதுவே ஒட்டுமொத்த கொரோனா அழிப்பு செயலணியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கு பொருத்தமான செயற்பாடாக அமையும்.

எனவே தற்போதுள்ள சூழல் மிகவும் பயங்கரமான நிலமை என்பதை சிறிலங்கா அரசு அறிந்து கொண்டு உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தங்களை விளங்கிக் கொண்டும் செயற்பட வேண்டும். சிறிலங்காவில் கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு எமது மக்களை பலி கொடுக்க மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனுமதிக்க முடியாது.

இறுதியில் சிறிலங்காவில் சுகாதார சேவைகள் முடக்கப்பட்டு கொத்துக் கொத்தாக மக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டால் அந்த அனர்த்ததிற்கு காரணம் கூறாமல் முன் எச்சரிக்கையாக இவ் சிறிலங்காஅரசும் தேர்தல் திணைக்களமும் நடந்து கொள்ள வேண்டும். மக்களது சுமூகமான வாழ்க்கை 100 வீதம் வழமைக்கு திரும்பும் வரை தேர்தலை மக்களுக்குள் திணிக்ககூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.