கொரோனா வைரஸ் உலகை நாசமாக்கியுள்ள போதிலும் கூட தேசிய ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவும், ஆசியாவில் பலமான நாடாக எம்மை மாற்றிக்கொள்ளவும் எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆகவே இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்டு நாட்டினை வளர்ச்சியின் பக்கம் கொண்டுசெல்ல வேண்டும் என தெரிவிக்கும் அமைச்சர் பந்துல குணவர்தன கொரோனா வைரஸ் ஒரு பக்கம் அச்சுறுத்தலாக இருந்தாலும் கூட மறுபக்கம் முகமூடி அணிந்துவந்துள்ள அதிஸ்டசாலியாக கருத வேண்டும் எனவும் கூறுகின்றார்.
அரசாங்க தகவல் திணைக்களதில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் ; உலகம் முகங்கொடுக்கும் மோசமான தாக்கம் இந்த கொரோனா வைரஸ் தாக்கமாகும். எனினும் இலங்கை இதனை வெற்றிகரமாக முகங்கொடுத்து வருகின்றது. ஜனாதிபதி, பிரதமரின் தீர்மானங்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கைகள் காரணமாகவும், ஏனைய அதிகாரிகளின் சிறப்பான செயற்பாடுகள் காரணமாகவே இதனை எம்மால் சரியாக கையாள முடிந்தது
கடந்த காலங்களில் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கணக்கான இறப்புகள் நேர்ந்தன. எனினும் அதைவிட மிகவும் மோசமான கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மரணங்கள் அதிகளவில் ஏற்படாத வகையில் எமது சுகாதார அதிகாரிகள் பார்த்துக்கொண்டுள்ளனர்.
இன்று உலகில் மிகப்பெரிய நாடுகள், பலமான நாடுகள் மற்றும் சுகாதார தரம் வாய்ந்த நாடுகள் என கூறும் நாடுகள் எல்லாம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை சரியாக கையாண்டுள்ள ஆரோக்கியமான நாடுகளில் 9 ஆம் இடத்தில் இலங்கை உள்ளது.
எமது தலைமைத்துவம், சுகாதார வேலைத்திட்டம் ஆகியவற்றின் விளைவாகவே எம்மால் மிகச்சிறந்த நாடுகளில் முதன்மை நாடாக அடயாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ; நாடாக நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டிய நேரமாகும். அதேபோல் எந்த நாளும் முடக்கத்தில் எம்மால் வாழ முடியாது.
எனவே அரசாங்கம் பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. பாடசாலைகளை ஆரம்பிக்கும் வரையில் கற்கை நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனலாம். அதேபோல் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் ரூபாவின் பெறுமதியை தக்கவைக்கவும் சில முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டுக்கு வெளியில் செல்லும் நிதியை கட்டுப்படுத்தி நாட்டுக்குள் வரும் பணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சில பொருட்கள் மூன்று மாத காலத்திற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, அதிசொகுசு பொருட்கள், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள், வாகனங்கள் என சில பொருட்களை தடை விதித்துள்ளோம்.
அதேபோல் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொழிற்சாலைகளை பலப்படுத்தவும், சிறு மற்றும் நடுத்தர வியாபரத்தை பலப்படுத்தவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய உற்பத்தியை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். எனினும் இலங்கையின் இறக்குமதியாளர்களுக்கு ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படுமென்றால் நிதி அமைச்சினை தொடர்புகொள்ளவும் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச முதலீடுகளை பெற்றுக்கொள்ள பல சலுகைகள் வழங்கப்படுகின்றது. வெளிநாட்டுவாழ் இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய சலுகைகள், திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டொலருக்கான பெறுமதி வீழ்ச்சி காணும் என நம்புகின்றோம். ரூபாவுக்கான பெறுமதியை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது
இலங்கையின் தேசிய பொருளாதரத்தை பலப்படுத்த இப்போது நல்லதொரு வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. எமக்கு தேவையான உணவுகளை நாமே தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்துகொள்ளவும், ஏற்றுமதிகளை பலபடுதவும் இப்போது நல்லதொரு வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்துடன் ஆசியாவின் அபிவிருத்தி கண்ட நாடாக எம்மை மாற்றுக்கொள்ள முடியும்.
எனவே இந்த கொரோனா வைரஸ் பரவல் ஒரு விதத்தில் முகமூடி அணிந்து வந்த அதிஷ்டசாலியாக நாம் கருத வேண்டும். ஆகவே நாம் வீழ்ச்சி கண்டுள்ளதாக நினைக்காது துரிதமாக மீண்டெழ இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவசியமானதாகும் என்றார்.