தமிழீழ தாயகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம்!

321 0

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த ‘தியாக தீபம்’ அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினம் இன்று காலை தமிழீழ தாயகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியருகில் இன்று காலை 9.30 மணி அளவில் நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமார் உட்பட கட்சி இளைஞரணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்;வை அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள் லோகேஸ்வரன் சாந்தி, பொலிசாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது

இதனையடுத்து இன்று காலை மாமாங்கத்திலுள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டிற்கு சென்ற பொலிசார் வழங்கிய அனுமதியை நாட்டின் சூழ்நிலை காரணமாக ரத்துச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது வீட்டில் அன்னையின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மகள் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேபோல், வவுனியாவில் 1150 நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

அவர்கள், ஏ-9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று தமிழினத்தின் தாய் பூபதி அம்மா அவர்களின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதியிருந்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வரையில் உண்ணாவிரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.