உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்பது அவசியம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தல்

365 0

உலகம் முழுவதற்கும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவியதற்கு சீனாவின் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு பொறுப்பேற்க வேண்டும். உண்மையான தகவல்களை உலகிற்குக் கூற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான்கரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை.

அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அங்கு 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவிலிருந்துதான் வேண்டுமென்றே கரோனா வைரஸ் பரப்பப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதற்கு சீனாவில் உள்ள அதிபர் ஜி ஜின்பிங் அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். கரோனா வைரஸ் எப்படி உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது என்ற விஷயத்தில் இன்னும் சீனா வெளிப்படையாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படையாக அனைத்து விவரங்களையும் தெரிவிப்பது அவசியம். மற்ற நாடுகளோடு ஒத்துழைக்க வேண்டும். உலகில் கரோனா வைரஸ் எவ்வாறு வேகமாகப் பரவியது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துவரும் நிலையில் அதற்கு ஒத்துழைத்து சீனா உண்மையைச் சொல்வதே சிறந்தது.

மக்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு முன்கூட்டியே சீனாவின் தலைமைக்கு இந்த விவகாரம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். ஆபத்தானது என்பதை அறிந்திருப்பார்கள். சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாததால் இந்த அளவுக்கு சிக்கல் நிறைந்ததாக கரோனா வைரஸ் மாறியுள்ளது”.

இவ்வாறு மைக் பாம்பியோ தெரிவித்தார்.