கொரோனாவை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்

334 0

ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து கொரோனாவை விரட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் 40 சதவீதம் குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல்தானே தவிர, அசட்டையாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் விரைவில் மீளும் என்ற நம்பிக்கையை புள்ளி விவரங்கள் விதைக்கின்றன.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட, அது சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் சென்று விடும். அதன் பின்னர் நிலைமையை சமாளிப்பது சாத்தியமற்றதாகி விடும். எனவே இனிவரும் காலங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் வராமல் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை விரட்ட ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.