தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை – மஹிந்த தேசப்பிரிய

424 0

சிறிலங்காவின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி இப்போது திட்டமிடப்பட வேண்டுமா அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதத்திற்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா என்பதை தீர்மானிக்கவும் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நாளை (திங்கள்கிழமை) சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தீர்மானம் எடுக்கும்வரை நாடாளுமன்ற தேர்தலின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை “நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது போன்ற பிற விடயங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அல்லது தேர்தல் செயலகத்தின் கீழ் வரவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும். அதுவே அவரின் தனிச்சிறப்பு. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்களை நடத்துவது மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.