பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு நாம் எதிரானவர்கள் அல்லர்! – ரோஹண ஹெட்டியாராச்சி

375 0

பாராளுமன்றத் தேர்தல் குறித்த தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடிகள் காணப்படுமாயின் சட்டமா அதிபர், சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்று உறுதியான தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தினத்தினை அறிவிப்பது தொடர்பில் நாளையதினம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ள நிலையில் பெப்ரல் அமைப்பு அவசர கடிதமொன்றை ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைத்தள்ளது.

அக்கடித்திலேயே பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால் நடத்தப்படவுள்ள பாராளுமன்றத் தேர்தலானது சுதந்திரமானதாக அமைய வேண்டும்.

அனைவரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.  தற்போது சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவில்லை. கொரோனாவின் தாக்கம் முழுமையாக சமுகத்திலிருந்து அகன்று விட்டதாக எந்தவொரு உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை.

இவ்வாறான அடுத்த மாத இறுதியில் பாராளுமன்றத் தேர்தலை திகதியை அறிவிப்பது பொருத்தமானதாக இருக்காது. தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் நாடு வழமைக்கு திரும்பி விடும் என்ற நம்பிக்கையில் தீர்மானத்தினை எடுக்க முடியாது.

ஜனநாயகத்தினை முழுமையாக நிலைநாட்டுவதானால் வேட்பாளர்கள் சுதந்திரமான பிரசாரங்களை முன்னெடுப்பதையும் 16 மில்லியன் வாக்களர்களினதும் சுதந்திரமான நடமாட்டத்தினையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே அதனடிப்படையியே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் தினம் பற்றி அறிவிப்பினை செய்வதற்கு முன்னதாக எம்முடன் கலந்தாலோசனைகளை நடத்தவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறு கோருகின்றோம்.

அதுமட்டுமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவானது தற்போதைய சூழலில் முடிவுகளை எடுப்பதற்கு நெருக்கடியை எதிர்கொள்ளுமாயின் சட்டமா அதிபரினதும், சுகாதார தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற முடியும். அதனடிப்படையிலேயே இறுதித் தீர்மானம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் என்றார்.