தேர்தல் பிரசாரம் செய்வது, வாக்கெடுப்பில் மக்கள் கலந்து கொள்வது ஆபத்து – நீலிக்கண்ணீர்

380 0
கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல் ஆணைக்குழுவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று (18) மாலை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

முறையான தேர்தல் பிரசாரம் இடம்பெற்று தேர்தல் நடத்தப்படுவதே முறையான ஜனநாயக நடைமுறை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது. இந்த சூழ்நிலைகளில், ஒரு திகதியை நிர்ணயிப்பதைத் தவிர்க்குமாறு  கேட்டுக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் செய்வது, வாக்கெடுப்பில் மக்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களை ஆபத்தில் சிக்க வைத்து விடலாம் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.