ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியோரே கைதாகின்றனர் – பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன

356 0

கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களையே இப்போது கைது செய்துள்ளோம். இந்த குற்றத்தில் தொடர்புபட்ட அனைவரையும் விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்கள் என பலர் அண்மைக் காலமாக கைதுசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் தொடர்புபட்ட குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும், அவர்களுக்கு சட்டத்தால் தணடனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும், அதேபோல் இந்த தாக்குதலில் உயிரிழந்த எமது மக்கள், பாதிக்கப்பட்டு இன்றும் மருத்துவ உதவிகளை நாடிக்கொண்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கம் எமது அரசாங்கத்திற்கு உள்ளது.

ஆட்சி மாற்றத்தின் போது இந்த காரணத்தினையும் நாம் பிரதான காரணிகளில் ஒன்றாக கருதினோம். கடந்த ஆட்சியில் இது குறித்த விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாதிருந்த நிலையில் இப்போது நாம் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் முழுமையான தகவல்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என புலனாய்வுத்துறைக்கு நான் கட்டளை பிறப்பித்துள்ளேன். இப்போது வரையில் விசாரணைகளை மற்றும் குற்றவாளிகளை கண்டறிய கையாளப்படும் பொறிமுறை மிகச் சரியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த பொறிமுறைக்கு அமையவே கடந்த காலங்களில் கைதுகள் சில இடம்பெற்றது. அதுவும் தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக உயிரிழந்த எமது அப்பாவி மக்கள் மற்றும் இன்றும் தம்மை குணப்படுத்திக்கொள்ள மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மக்கள் சார்பில் நாம் செய்ய வேண்டிய கடமையை எமது அரசாங்கம் சரியாக நிறைவேற்றும். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னாள் நிறுத்துவோம் என்றார்.