ஊரடங்கு வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உள்பட மூவர் காவல் துறை சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வயோதிப தம்பதியினரை காயப்படுத்தி வீட்டிலிருந்த பவுண் நகைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணம், கைத்தொலைபேசி உள்ளிட்டவற்றைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மூத்த காவல் துறை அத்தியட்சகரின் கீழான சிறப்பு காவல் துறை பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், மானிப்பாய் ; சாவகச்சேரி காவல் துறை பிரிவுகளில் உள்ள நகைக் கடைகளில் அடகு வைக்கப்பட்ட நிலையில் 16 பவுண் நகை அடைவு சீட்டுகளும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கொள்ளைக் கும்பல் அராலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மானிப்பாய், சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.