கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு முழுஅடைப்பு மட்டுமே ஒரே வழியாக இருக்காது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். சமூகப்பரவலை ஒத்திப் போடுவதற்கு மட்டுமே இந்த முழு அடைப்பு உதவும்.
பரவலாகப் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிப்பதன் மூலமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆர்.டி.பி. சி.ஆர் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கொரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். ஒரு கருவியை (கிட்) ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இதுவரை 7 மையங்கள் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு பரிசோதனைகள் அதிகபட்சமாக 250-ல் இருந்து 300 வரை தான் செய்ய முடியுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 17 மையங்களிலும் சுமார் 5000 சாம்பிள்கள் மட்டுமே சோதிக்க முடியும்.
இந்தநிலையில் ஒரு மையத்தில் எத்தனை மாதிரிகள் (சாம்பிள்கள்)வந்துள்ளன. அதில் எவ்வளவு சோதிக்கப்பட்டு உள்ளன. எவ்வளவு கிடப்பில் உள்ளன என்ற விவரத்தைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவர்கள் வெளியிடுகிற புள்ளிவிவரங்கள் மக்கள் நம்பக்கூடியவையாக இல்லை.
நமது மாநிலத்தில் ‘ரெட் ஸ்பாட்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளை தனிமைப் படுத்தி அங்கே பரவலாக விரைவு சோதனைமுறைகள் (ரேபிட்டெஸ்டிங்) மூலமாக சோதிக்க வேண்டும்.
‘பாசிட்டிவ்’ என நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ மூலமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும். இது தான் கொரோனா தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான ஒரேவழியாகும் என மருத்துவ வல்லுனர்கள் கூறிவருகின்றனர். இந்த வழியை இதுவரை தமிழக அரசு கடைபிடித்ததாகத் தெரியவில்லை.
முழுஅடைப்பை வரம்பின்றி நீட்டிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால், போதிய தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் இல்லாமலேயே நோய் குறைந்து விட்டது என்று பொய்யான ஒரு சித்தரிப்பை ஏற்படுத்துவது தமிழக மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும்.
எனவே, முதல்-அமைச்சர், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து, தமிழக மக்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்று வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.