சிறிலங்காவின் தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில், நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளை, பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு அளவீட்டின்போது மோசடி செய்யப்பட்டே விநியோகிக்கப்படுவதாகவும், பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறை சரியான அளவில் இல்லை என்றும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையேடுத்தே இத் திடீர் சுற்றிவளைப்பு – சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அளவை, நிலுவை உபகரணங்கள் கண்காணிக்கப்பட்டதுடன், சீர்செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் குறிப்பிட்ட சில பொருட்களின் நிறைகள், பொதியில் குறிப்பிட்டது போல் இருக்காமையால், சில வர்த்தகர்கள் அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
நுகர்வோர் சட்டதிட்டங்களையும், வணிக விழுமியங்களையும் பின்பற்றாத வர்த்தகர்களுக்கு எதிராக இனிவரும் காலப்பகுதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.