திரைமறைவு அரசியல் நாடகங்கள்! -வைத்திய காலநிதி சிவமோகன்

333 0

திரைமறைவு அரசியல் நாடகங்களால், மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்சமான சூழ்நிலையில், வாழ்வாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திரைமறைவில் தேர்தல் நடத்துவதா என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பு, முற்றாக சரிசெய்யப்பட்டுள்ளது என, சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்ட பின்னர், மக்கள் தங்களை மீள் கட்டுமாணம் செய்துகொள்வதற்கு குறைந்தது மூன்று மாதகாலமாவது கால அவசாகம் வழங்கிய பின்னரே, தேர்தல் எனும் வார்த்தையை, தேர்தல்கள் ஆணையகம் உச்சரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, வெறுமனே இரண்டு வாரங்கள் அறிவித்ததில், தேர்தல் நடத்தப்படல் வேண்டும் என்று சிலர் கூக்குரல் எழுப்பி வருவது, மக்களை இன்னும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னரே, இந்த கொரோனா விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், அப்போதே, விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், இந்த அளவுக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் இதனால், இப்போது பொதுமக்கள் அனைவரும் பல துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

எனவே, தேர்தலை நடத்துவது தொடர்பான முயற்சியைக் கைவிட்டு, இந்தக் கொடூர நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும் செயற்பாட்டில், அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்றும் என்று அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.