கொரோனாவின் தாக்கம் முற்றாக நீங்கும் வரை பொதுத்தேர்தலை நடத்தக் கூடாதெனவும், மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதியன்று நடத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிலில், ‘தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற மிகப்பெரிய சவால் கொரோனா ஆபத்தை முற்றாக நீக்கி இயன்ற அளவு விரைவாக சகஜ நிலையை ஏற்படுத்துவது தான். இதன் பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியும்.
ஆகவே மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது என்பதே எனது கருத்து. எமக்கு நாடாளுமன்றப் பதவிகளோ அரசியலோ தற்போது முக்கியமல்ல மக்களின் பாதுகாப்பே முக்கியமானது.
எனவே வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தற்போது பராமரித்துவரும் வைத்தியசாலை அத்தியட்சகர்கள் போன்றோர் அரசியல் தலையீடு இல்லாமல் தற்போது கொரோனா பயம் முற்றாக நீங்கிவிட்டது என்று அறிக்கை தந்து தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கு தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கும் தேவையான அவகாசத்தைக் கொடுத்த பின்னர் மே 23 ஆம் திகதி தேர்தல் நடத்த முடியுமென்றால் தாராளமாக நடத்தட்டும்.
ஆனால் நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி சிறுபான்மையாக இருப்பதாலும் பெரும்பான்மை எதிர்க்கட்சியின் உட்பூசல் காரணமாகவும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துவதாகக் காணப்படுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலும் நாடாளுமன்றமும் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்கள் என்று கூறலாம். நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் இயங்கு நிலையில் இருந்தால் தான் ஜனநாயகம் இயங்கும். அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக நாங்கள் தேர்தலை முன்னெடுத்தோமானால் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.