குன்னூரில் போராட்டத்திலும் சமூக இடைவெளியை கடைபிடித்த தொழிலாளர்கள்

325 0

குன்னூரில் சம்பளம் கேட்டு நடைபெற்ற போராட்டத்திலும் சமூக இடைவெளியை தொழிலாளர்கள் கடைபிடித்தனர்.நீலகிரி மாவட்டத்திலும், வால்பாறையிலும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் குன்னூரில் உள்ளது. குன்னூர் பகுதியில் டைகர்ஹில், கரன்சி, பக்காசூரன் மலை உள்ளிட்ட இடங்களில் டேன்டீ தேயிலை தோட்டங்கள் உள்ளன. அந்த தேயிலை தோட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பச்சை தேயிலை பறிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேயிலைத்தூள் உற்பத்தியை தொடங்குவதாக டேன்டீ நிர்வாகம் அறிவித்தது. அதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்தனர். அதன் முன்பு அவர்கள் சம்பளம் கேட்டு பணியை புறக்கணித்து, சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக அரசுக்கு தெரிவிப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. அதனால் சமரசம் அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.