ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயண செலவு வழங்க மறுப்பு

321 0

ரேஷன் ஊழியர்களுக்கு, பயண செலவாக, தினமும், 200 ரூபாய் வழங்க, கூட்டுறவு சங்கங்கள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தடுப்பு கால நிவாரணமாக, ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், இம்மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இந்த பணிகளை, இம்மாதம், 2ம் தேதி துவங்கி, 15ம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ரேஷன் ஊழியர்களுக்கு, பயண செலவாக, தினமும், தலா, 200 ரூபாய் வழங்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்களுக்கு, மார்ச், 26ல், கூட்டுறவு துறை உத்தரவிட்டது.

கூடுதல் பணிச்சுமையால், ஊழியர்கள், சிறப்பு ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இதனால், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, தலா, 2,500 ரூபாயும்; எடையாளர்களுக்கு, தலா, 2,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்க, கூட்டுறவு துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஊழியர்களுக்கு, பயண செலவை வழங்க, கூட்டுறவு சங்கங்கள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து சேவை முடங்கியுள்ளதால், ஊழியர்கள், சொந்த மற்றும் உறவினர்களின் வாகனங்களில், அதிக சிரமத்துடன் பணிக்கு வருகின்றனர். ரேஷன் கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம், பயண செலவை கேட்டால், ‘ஊக்கத்தொகை, பயண செலவு என, இரண்டும் வழங்க முடியாது; ஊக்கத்தொகை தான் வழங்கப்படும்’ என, கூறுகின்றனர்.

சில அதிகாரிகள், ‘பயண செலவாக, 50 ரூபாய், 100 ரூபாய் தான் வழங்கப் படும்’ என்கின்றனர். எனவே, பயண செலவை முழுவதுமாக வழங்க, சங்க அதிகாரிகளுக்கு, உயரதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.