மக்களின் பாதுகாப்பே முக்கியம் ! கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக்கூடாது !

439 0

பாராளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ;ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அந்த வகையில், கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக் கூடாதெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் தெரிவித்துள்ளார்.

கேள்வி – பாராளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்–  தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற மிகப்பெரிய சவால் கொரோனா ஆபத்தை முற்றாக நீக்கி இயன்ற அளவு விரைவாக சகஜ நிலையை ஏற்படுத்துவதுதான். இதன் பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியும். ஆகவே மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது என்பதே எனது கருத்து. எமக்கு பாராளுமன்றப் பதவிகளோ அரசியலோ தற்போது முக்கியமல்ல மக்களின் பாதுகாப்பே முக்கியமானது.

எனவே வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தற்போது பராமரித்துவரும் வைத்தியசாலை அத்தியட்சகர்கள் போன்றோர் அரசியல் தலையீடு இல்லாமல் தற்போது கொரோனா பயம் முற்றாக நீங்கிவிட்டது என்று அறிக்கை தந்து தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கு தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கும் தேவையான அவகாசத்தைக் கொடுத்த பின்னர் மே 23 ஆம் திகதி தேர்தல் நடத்த முடியுமென்றால் தாராளமாக நடத்தட்டும்

ஆனால் நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி சிறுபான்மையாக இருப்பதாலும் பெரும்பான்மை எதிர்க் கட்சியின் உட்பூசல் காரணமாகவும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துவதாகக் காணப்படுகின்றது.

பாராளுமன்றத் தேர்தலும் பாராளுமன்றமும் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்கள் என்று கூறலாம். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இயங்கு நிலையில் இருந்தால்தான் ஜனநாயகம் இயங்கும்

அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக நாங்கள் தேர்தலை முன்னெடுத்தோமானால் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

வாக்களிக்கப் போகும் மக்கட் தொகை வெகுவாகக் குறையும்.

உண்மையாக கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலையில் படையினரின் பங்கு தேர்தலின் போது மிகப் பயங்கரமாக இயங்கக்கூடும். அவர்களை மீள அழைக்க முடியாத அரசாங்கம் அவர்களைக் கொண்டு அரசியல் ரீதியாக எவ்வெவற்றைச் செய்யக்கூடும் என்பது ஒரு பாரிய கேள்வியாக அமையும்.

தேர்தல் நடந்து முடிந்தாலும் அதன் சட்ட வலு கேள்விக் குறியாகிவிடும்.

ஒருவருக்கொருவர் தள்ளி நில்லுங்கள் என்று மக்களுக்கு இதுகாறும் கூறிவந்த அரசாங்கம் வாக்காளர்களை ஆறடி தூரத்தில் இராணுவத்தைக் கொண்டு நிறுத்தப் போகின்றதா?

ஆகவேதான் கூறுகின்றேன் அரசியலுக்கு அப்பால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வைத்தியத்துறையினரின் பக்கச் சார்பில்லாத நிபுணத்துவக் கருத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று. அப்படி இல்லை என்றால் பொது மக்களே அவதிப்படுவர். ஜனநாயகமும் பாதிக்கப்படும்.

தேர்தலின் பின்னரான பாராளுமன்ற வெற்றியையும் கொரோனா வைரசின் அதிஉச்சப் பெருக்கத்தையும் ஒரே தருணத்தில் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா?

வடக்கில் ஒரேயொரு பரிசோதனை நிலையம் மட்டும் இயங்குகின்றது. பல நிலையங்களை அமைத்து கொரோனா பரிசோதனை உடனே மும்முரமாக வடக்கில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி அந்த கலைத்தல் ஆணையைக் கைவாங்கி பாராளுமன்றத்தைத் தொடர்ந்து இயங்க வைப்பதே தற்போது உசிதமாகத் தென்படுகின்றது. அதைவிட்டு வைத்தியத் துறையினர் கொரோனா முற்றாக அழிந்துவிட்டது தேர்தல் நடத்தலாம் என்று உண்மையான அறிக்கையொன்றைத் தந்தால் மே 23 ;ஆம் திகதி நடத்தலாம். ஆனால் தேர்தலுக்கு வரும் மக்கட் தொகை எவ்வாறிருக்கும் என்பது பாரிய புதிராக அமையும்!