மே மாதம் 2ஆம் திகதி என்ன நடக்குமென்பதே பலருடைய கேள்வியாகும் என சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.
காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள விமல் வீரசன்ச, இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மே மாதம் 2ஆம் திகதி என்ன நடக்குமென்பதே பலருடைய கேள்வியாகும். அக்கேள்விக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை.
தேர்தலை பிற்போடவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. கொரோனா சவாலை எதிர்கொண்டு முன்னேறிகொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றும் பொருட்டல்ல.
ஆகையால்தான், கொரோனா வைரஸ் வியாபிக்காமல் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழகங்களைப் பகுதி பகுதியாகத் திறப்பதற்கான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளையும் திறப்பதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றொழிப்பின் வேலைத்திட்டம் வெற்றிப் பாதையில் செல்வதனால்தான், இவ்வாறான முன்னகர்வுகளை முன்னெடுக்க முடிகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்று மாதங்கள் கடந்துவிட்டால், அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் அரசமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
அதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய தேவையில்லை. அதன் பின்னர், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரமும் பிரதமர், காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பிரகாரமும், எவ்வாறான தீர்மானங்களை எட்டவேண்டுமென்பது தொடர்பில் காபந்து அரசாங்கமே தீர்மானிக்கும். சகலவற்றையும் நல்லதாகவே சிந்திக்கவேண்டும்.
அத்துடன், மே மாதம் 2ஆம் திகதிக்குப் பின்னர் வெறுமையாகிவிடும் என்றும் அதற்கு வியாக்கியானம் கேட்கவேண்டி எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைவாக, அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.