சிறிலங்கா தலைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் ! நீண்ட நாட்களின் பின் சமூகத்தில் தொற்றாளர் !

375 0

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அடையாளம் காணப்பட்ட ஐவரில் நால்வர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்களென்றும் நால்வரில் ஒருவரே இவ்வாறு கொழும்பில் அடையாளம் காணப்பட்டாரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.  குறித்த பெண் இந்தியா சென்று திரும்பியிருந்தவரென தெரிவிக்கப்படுகிறது .

இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் வசிக்கும் சிலரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு கிராட்ண்பாஸின் நாகலாகம் பகுதி அதி அபாயகர பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 168 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 144 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 63 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.