கோவையில் இருந்து மணப்பாறைக்கு தாயாருடன் நடந்து சென்ற என்ஜினீயர்

370 0

கோவையில் இருந்து மணப்பாறைக்கு நடந்து சென்ற என்ஜினீயர் அவரது தாயாருடன் லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார். இதற்கான நடவடிக்கையை வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மேற்கொண்டார்.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எதுமலை பகுதியை சேர்ந்தவர் கே.கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கோவையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் தாயார் லட்சுமிதேவியும் (50) தங்கி இருந்தார்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தி தனது தாயாருடன் கோவையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக நேற்று காலை கோவையில் இருந்து தாயார் லட்சுமிதேவியுடன் புறப்பட்ட கிருஷ்ணமூர்த்தி அந்த வழியாக சென்ற ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏறி பல்லடம் வந்தார். பின்னர் வேன் ஒன்றில் ஏறி சிறிது தூரமும், பிறகு சிறிது தூரம் நடந்தும் வெள்ளகோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

இந்த நிலையில் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே தாயாருடன் நடந்து செல்லும் தகவல் நகராட்சி கமிஷனர் டி.சசிகலாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த கமிஷனர், கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது தாயாருக்கும் 5 கிலோ அரிசி, பிஸ்கெட், காலை உணவு கொடுத்தார். பின்னர் அந்த வழியாக திருச்சிக்கு சென்ற ஒரு லாரியை தடுத்து நிறுத்தி அதில் தாயும் மகனையும் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவைத்தார்.