உறைந்து நிற்கும் அமெரிக்கா – ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பலி

370 0

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 20 லட்சத்து 82 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 14 லட்சத்து 38 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரத்து 46 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 603 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.