பிக்குவின் செயலுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மலையகத்தில் போராட்டம்

345 0

v-radhakrishnan-720x480மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் அரசாங்க உத்தியோகத்தரையும், தமிழர்களையும் தரக்குறைவாக பேசிய விடயம் தொடர்பாக அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளாவிட்டால் அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலையகத்திலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(15) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை மத தலைவர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு சிலர் செய்கின்ற அநியாயங்களை இனிமேலும் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியாது. எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை இருக்கின்றது.

மட்டக்களப்பில் அந்த பௌத்த துறவி நடந்து கொண்டதை போல இந்து மத தலைவரோ, மூஸ்லீம் மத தலைவரோ அல்லது கிறிஸ்தவ மத தலைவரோ நடந்து கொண்டிருந்தால் இன்று அவருடைய நிலைமை என்னவாகியிருக்கும்.

சமாதானத்திற்கு பங்கம் விளைவித்தார் என்ற குற்றசாட்டில் பொலிஸார் கைது செய்திருப்பார்கள். ஆனால் பௌத்த துறவி என்ற காரணத்தினால் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் பொலிஸாரும், அரசாங்கமும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த சம்பவம் நடைபெறுகின்ற பொழுது குறித்த இடத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளும் அங்கே இருந்தார்கள். அவர்களால் கூட ஒரு நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அரசாங்க உத்தியோகத்தர்களை மதிக்க வேண்டியவர்கள். அவர்களுக்கென தன்மானம் இருக்கின்றது. இதே நிலைமையில் ஒரு பெரும்பான்மையின அரசாங்க ஊழியர் இருந்திருந்தால் அந்த இடத்தில் நிலைமை என்னவாக இருக்கும்?

கடந்த காலங்களில் தமிழ்ர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முற்பட்ட பொழுது இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்பட்டது. பல உயிர்கள் பலியாகின. பொருட்கள் சொத்துகள் சேதமாகின. இதன் மூலம் சர்வதேசத்தில் எமது நாட்டின் கௌரவம் கேள்விக் குறியாக்கப்பட்டது. எனவே அவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படக் கூடாது.

மத தலைவர்கள் என்பவர்கள் நாட்டு மக்களை நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கேவலமானதும் கண்டிக்கதக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

அந்த பௌத்த துறவி இலங்கையில் இருக்கின்ற அத்தனை தமிழர்களையும் தரைக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருக்கின்றார். அவருடைய இந்த செயல் அந்த மதத்தை சார்ந்தவர்களை வெட்கி தலைக்குனிய வைத்துள்ளது.

தமிழர்களை தொடர்ந்தும் சீண்டி பார்ப்பது பௌத்த மத துறவிகளுக்கு ஒரு வேடிக்கையாக மாறிவிட்டது. இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

கடந்த அரசாங்கம் அதனை தடுக்க முடியாமல் போனதன் காரணமாக அந்த அரசாங்கமே வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதே நிலைமை இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படாலம். இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற வடகிழக்கு,மலையகம் உட்பட அனைத்து தமிழர்களும் ஒரே அணியில் பயணித்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே நாம் இன்று ஒற்றுமையாக இருக்க வேண்டியதே காலத்தின் தேவையாகும். எனவே தமிழர்கள் குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பதாக யாரும் தவறாக எடைபோட்டு விட வேண்டாம். நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம். இதனை அரசாங்கம் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

எனவே இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்ற கடைசி சம்பவமாக இது இருக்க வேண்டும். ஒரு சில பௌத்த துறவிகள் அவர்களுடைய துறவி உடைகளை அணிந்து கொண்டுநடந்து கொண்ட முறை மிகவும் மோசமானதாகும். இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இதனை கண்டிக்கும் முகமாக மலையகத்தில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இன்று நல்லாட்சி அரசாங்கம் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. ஆனால் மத தலைவர்கள் ஒரு சிலர் முட்டுக் கட்டையாக இருக்கின்றார்கள். மத தலைவர்கள் மதத்தை போதிப்பதை சரியாக செய்தால் மட்டுமே இந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.