ஆவாக் குழுவில் செயற்பட்டவர் ஒரு இராணுவச் சிப்பாய் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன

331 0

ruwan-wijewardena-1யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ‘யாழ்ப்பாணத்தில் உந்துருளிகளில் சென்று கப்பம் பெறும் நடவடிக்கையில் ஆவாக் குழுவினர் ஈடுபட்டுவந்துள்ளனர்’.

இந்த ஆவா குழுவுக்கும், சிறிலங்கா இராணுவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எனினும், ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குகிறார். அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்.” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆவா குழு சந்தேக நபர்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானபோது, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அதனை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக தற்போது, இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.