சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சிலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.