இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு சேதமடைந்த அனைத்து படகுகளும் மத்திய அரசால் புதுப்பிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி முதல்-அமைச்சர் வலியுறுத்தினார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இன்னும் மத்திய அரசு சம்மதிக்கவில்லை.
இலங்கை துறைமுகத்தில் தொலைந்து போன 18 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, தரித்திரத்தின் பிடியிலும், மிகப் பரிதாபமான வறுமை நிலையிலும் உள்ளனர். தமிழகத்தின் பாக் நீரிணை மாவட்டங்களின் மீனவர் சங்கங்கள், அந்த 18 மீன்பிடி படகுகளுக்கான நஷ்டஈட்டை கேட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், இலங்கை நாட்டில் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 105 படகுகளை உடனடியாக விடுவிக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளன.
எனவே அவர்களுக்கான சரியான நஷ்டஈட்டை மத்திய அரசு வழங்குவதோடு, அவர்களின் தொலைந்துபோன வாழ்வாதாரத்தை மீண்டும் கட்ட தேவையான உதவிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு மீன்பிடி படகின் விலை ரூ.25லட்சமாகும்.
இலங்கை பிடியில் கடுமையான சேதத்தை சந்தித்து வரும் அந்த 105 படகுகளையும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.