டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து, தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் அவரது காலடி படாத ஊர்களே இல்லை; அவரது இலட்சிய முழக்கம் எதிரொலிக்காத இடங்களே இல்லை என்று வியந்து போற்றும் அளவுக்கு அரும்பணி ஆற்றிய, நாவலர் நெடுஞ்செழினின் அன்புத் துணைவியார், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நேற்று மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற போது, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க் கட்சியாக இருந்த காலத்திலும் சரி, அதற்குப் பின் தி.மு. கழகம் ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற நேரத்திலும் சரி, அம்மையார் திறம்பட அரசுப் பணி ஆற்றியவர்; என்றைக்கும் திராவிட இயக்க உணர்வோடு இயங்கியவர்.
அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.