அரசாங்க நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் வாரம் வரை, 2,387 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக 135 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக, மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல், மாவட்டத்தில் உள்ள 14 அரசி ஆலைகளிலும், ஏழு களஞ்சியசாலைகளிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
நெல் குற்றுவதற்கான அனுமதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .
அத்துடன் இம்முறை சிறுபோகத்தில் மாவட்டத்தில் மொத்தமாக 21,500 ஹெக்டெயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அதற்கான பசளை யூரியா 4,600மெற்றிக்தொன்,டி.எஸ்.பி. 573 மெற்றுக்தொன், எம்.ஓ.பி 1,220 மெற்றிக் தொன் தேவையாக உள்ளதாகவும் குறித்தளவான உரம் விவசாயிகளுக்கு வழங்க கையிருப்பில் காணப்படுவதாகவும் தேவையான விவசாயிகள் உரிய கமநல சேவைகள் நிலையம் மூலம் பசளைகளைப் பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சௌபாக்யா திட்டத்தின் மூலம் இதுவரை 4,000 விவசாயிகளுக்கு, பயிர் கன்று, விதை பக்கெற்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்மூலம் தமது உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவதுடன் தன்னிறைவுக்கு ஏதுவாக அமையும் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.