கலந்துரையாடலுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு

484 0

நாட்டில் COVID-19 பரவுவது மற்றும் 2020 பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட விவகாரங்கள் குறித்து, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு தேசிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எழுத்து பூர்வமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட்டுள்ள 2020 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், சமுதாயத்தில் அதன் தாக்கம் மற்றும் நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பிரச்சினைகளின் பாரதூரமான விளைவினை கருத்திற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஒரு திகதியையும் நேரத்தையும் உடனடியாக வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.