சிறைகளில் கரோனா தொற்றைத் தடுக்க 45,000 கைதிகளை விடுவிக்க துருக்கி முடிவு

321 0

சிறைக் கைதிகளிடையே கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக, 45,000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க வழிசெய்யும் சட்ட மசோதா துருக்கி நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 279 உறுப்பினர்கள் ஆதரவும் 51 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய நாடுகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன.

மேலும், நோய்த் தொற்றைத் தவிர்க்க சமூக இடைவெளியை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சிறைச்சாலைகளில் கைதிகள் நெருக்கடி, போதிய சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு மிக எளிதில் கரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இச்சூழலைக் கருத்தில் கொண்டு ஈரான் அரசு மார்ச் மாதத் தொடக்கத்திலேயே 70,000 கைதிகளை விடுவித்தது.

வேறு சில நாடுகளும் சிறைக் கைதிகள் தொடர்பாக புதிய விதிகளை இயற்றின. இந்நிலையில் தற்போது துருக்கி அரசு, அதன் சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் விதமாகவே இந்தப் புதிய சட்ட மசோதவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின்படி குறிப்பிட்ட பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள 45,000 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை மே மாதம் வரை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால இடைவெளியை மூன்று தடவை நீட்டிக்கவும் இம்மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் இதுவரை 61,049 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,296 பேர் இறந்துள்ளனர். 3,957 பேர் குணமடைந்துள்ளனர்.

துருக்கியில் 79 சிறை ஊழியர்களுக்கும் 17 சிறைக் கைதிகளுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.