இத்தாலியில் கரோனா வைரஸின் வேகம் தணிந்திருந்த போதிலும் உயிர்பலிகள் இன்னும் குறையவில்லை, அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 602 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்தது.
கரோனா வைரஸின் பிறப்பிடம் சீனாவின் வுஹான் நகராக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில்தான் மையாக சுழன்றடித்து வருகிறது, அதிலும் இத்தாலி நாடு கடுமையாக கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டது. கடந்த வாரம் வரை உலகளவில் அதிகமான உயிரிழப்புகளை கரோனா வைரஸால் சந்தி்த்த நாடு என்ற பரிதாபமான பெயரை இத்தாலி பெற்ற நிலையில் அங்கு இறப்பு குறைந்து வருகிறது.
இ்ப்போது எந்த நாடும் எட்ட முடியாத நிலையில் அமெரி்க்காவில் 26 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் உயிரிழப்புகள் குறையவில்லை.
அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 602 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 67 ஆக இருக்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக நேற்று 2,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,முன்பு இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது மிகக்குறைவாகும். குணமடைந்து செல்வோர் எண்ணி்க்கை 37 ஆயிரமாக அதிகரித்துள்ளது
இத்தாலியின் மக்கள் பாதுகாப்புத்துறையின் இயக்குநர் ஏஞ்சலோ போரேலி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ திங்கள் கிழமையோடு ஒப்பிடுகையில் நேற்று புதிதாக 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், தேசிய அளவில் 1.40லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 28 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 3,186 பேர் தீவிர சகிச்சை பிரிவிலும் உள்ளார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 70 சதவீத நோயாளிகள் வீடுகளில்தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களில் 1,675 பேர் குணமடைந்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்