அரசின் உத்தரவை மதித்து ஊரடங்கு நீட்டிப்புக்கு மக்கள் முழுமையான ஆதரவு தரவேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதும், அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுவதும் அவசியம் ஆகும்.
அந்த வகையில் தமிழக அரசு அதன் கடமையை செய்துவரும் நேரத்தில், இப்போது நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு ஆணையும் முழுமையாக வெற்றி பெற அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும். அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளையும் மதித்து, வீடுகளைவிட்டு வெளியில் வராமல் ஒத்துழைக்க வேண்டும்.
ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் பட்டினியின்றி வாழ்ந்தால்தான், அவர்களின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு முழுமையாக வெற்றி பெறும். பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தியவாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப்பொருட்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ.1,000 வீதம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.