பிரதமர் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பெருக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு தமது பேச்சு வன்மையால் திசை திருப்பிவருவது கண்டனத்திற்குரியது என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசை எதிர்த்து மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தை குவித்து வைத்துக்கொண்டு மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்து வருகின்றது.
தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 நாட்களாக அவர்களுக்கு நோய் இருக்கிறதா?, இல்லையா? என்பதை பரிசோதிக்க முடியாத அவலநிலையில் தமிழக அரசு இருக்கிறது. சீனாவில் இருந்து துரித சோதனை கருவி வரும், வரும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை வந்தபாடு இல்லை. இந்நிலையில் அச்சம், பீதியோடு மன உளைச்சலில் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள்.
பிரதமர் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பெருக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு தமது பேச்சு வன்மையால் திசை திருப்பிவருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
21 நாள் மக்கள் ஊரடங்குக்கு பிறகு இனியாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து கொரோனா நோயை வீழ்த்துகிற முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.