வட தமிழீழத்தில் புதிதாக சில பகுதிகள் முடக்கப்படலாம்!

525 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக சில பகுதிகளை முடக்குவது தொடர்பில் இன்று ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போதே அவர், கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால், பொது மக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளையில், யாழ்ப்பாணத்தில் மேலும் 8 கொரோனா நோயாளர்கள் நேற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் அப்பகுதியில் உள்ள பலரிடம் அடுத்துவரும் நாள்களில் விரைந்து கொரோனாத் தொற்றுக்கான சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கொரோனா பாதித்த நோயாளிகள் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாள்களின் பின்னர் இனங்காணப்பட்டு வருகின்றமை காரணமாக அது பரவுவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் இனங்காணப்பட்டுள்ள பகுதிகளை பாதுகாப்புக் கருதி மீண்டும் முடக்குவது குறித்து உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அநேகமாக இந்த முடிவு இன்று எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.