நேரலையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து, ஃபிட்னஸ் வகுப்புகள்: சிபிஎஸ்இ அறிமுகம்

393 0

நேரலையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து உள்ளிட்ட ஃபிட்னஸ் வகுப்புகளை வழங்க சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஆரோக்கிய இந்தியா இயக்கத்துடன் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளது.

சிபிஎஸ்இ-ன் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையாக ஃபிட்னஸ் பயிற்சிகள் அளிக்கப்படும்.

நாளை (ஏப்ரல் 15) காலை 9.30 மணிக்கு நேரலை வகுப்புகள் தொடங்குகின்றன. ஒரு மாதத்துக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பான காணொலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவுடன் பேசினேன். அவருடன் இணைந்து ‘ஆரோக்கிய இந்தியா’ இயக்கத்தின் மூலம் நிபுணர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு அடிப்படை உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்து, யோகா, தியானம், எதிர்ப்பு சக்தி மேம்பாடு ஆகியவை குறித்து கற்றுத் தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

”ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆரோக்கியமாகவும் திறனுடனும் இருக்க இந்த வகுப்புகள் உதவும். இதனால் இளம் வயதில் இருந்தே நல்லதொரு வாழ்க்கை முறையையும் பின்பற்ற முடியும்” எனவும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.