உத்தர பிரதேசத்தில் கட்டுமானத் தொழிலுக்கு நாளை முதல் விலக்கு அளிக்கும் முடிவு கைவிடப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.
இதனால் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளில் சிலவற்றிக்கு விலக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தன. அதன்படி உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்டுமானத் தொழிலை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடருவதற்கு அனுமதி வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதால் கொடுக்கப்பட்ட விலக்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.